Category Archives: Uncategorized

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!
நற்றிணை : 238
தீட்டியவர்: கந்தரத்தனார்

இந்தக் காட்சியிலும் அனுதாபத்திற்குகந்த மேகம் குற்றவாளியாக நிற்கிறது! இங்கேயும் வழக்கமான பல்லவிதான். தலைவன் பொருள் தேடச் சென்றான் செல்லும் போது மழைப் பருவத்திற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்றான். மழைவருவதற்கு அறிகுறியாக இடி இடித்தது. தலைவியின் மனதில் இடி இறங்கியது. கவலைப்பட ஆரம்பித்தாள். அவளைத் தேற்று முகமாக தோழி வழக்கம் போல, எல்லா சங்க காலத்துப் பெண்களைப் போல மேகத்தைப் பழித்தாள். என்ன சொல்கிறாள். வாருங்கள் வந்து கேளுங்கள்..

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
“அவர் நிலை அறியுமோ ஈங்கு”என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே

வறம் கொல வீந்த கானத்து: வறட்சியாலே, கொடிய கோடை வறட்சியாலே பட்டுப்போன காட்டிலே..
வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம். பிடவம் என்றால் புதர் செடி. வண்டுகள் வாய்திறந்து தேனுண்ணுமாறு பிடவ மலர்கள் மலரும். இதை இப்படியும் கொள்ளலாம் -வண்டுகள் தம் வாய் திறந்து அதாவது இதழிகளை விரித்து வண்டுகள் தேனுண்ணுமாறு மலரும். அந்தப் பிடவமலர்கள் எப்படியிருக்கின்றன. சிறிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய ஆயர்மகளிர் கூடும் கூட்டம் போல இருக்கிறதாம்
குறும் பூங் கோதை மகளிர்.. பூங்கோதை யென்றால் பூக்களையுடைய கூந்தலுள்ளவள்.
குழூஉ நிரை கடுப்ப… கூடும் கூட்டம் போல …. அந்தப் பிடவ மலர்கள் பூத்துள்ளன. பிடவமலர்கள் இலைகளை உதிர்த்து தூர் தெரியாதபடி பூத்தலால்… கானகத்தை பூச்சூடிய மகளிராக உவமை சொல்லப்பட்டது. மாலை அந்தி.. அப்படிப்பட்ட மாலைப் பொழுதிலே
மால் அதர் நண்ணிய: நான் காம நோய் மிகக் கொள்ளுமாறு
பருவம் செய்த கருவி மாமழை! கார்ப் பருவத்தை தோற்றுவித்த மேகமே… கார்ப்பருவம் இன்னும் வரவில்லை… ஆனால் வரவைத்தது இந்த மேகமாம்.. இது மேகத்தின் தவறு.. இந்த மேகம் வேறென்ன செய்தது? தலைவனை அழைத்தல்லவா வந்திருக்கவேண்டும். அப்படியிராமல் தனியாக வந்து நிற்கிறது.
அவர் நிலை அறியுமோ ஈங்கென வருதல்.. “அவரது நிலையை அறிவாயோ என்பதுபோல” தனியாக வருகிறது இந்த மேகம். இன்னொரு பொருள். அவர் நிலை ஈங்கு அறி என வருதல்: “அவர் நிலைமையை நான் கூற இங்கு அறிந்து கொள். அவர் இன்னும் வரவில்லை என்பதுபோல வருதல்.
சான்றோர்ப் புரைவதோ அன்று… நல்லவர்கள் செயலை ஒத்ததாகாது… “பிறர் நோயையும் தன் நோய்போல் போற்றி அறனறிதல் சான்றோர்கட் கெல்லாம் கடன்” என்று கலித் தொகையில் சொல்லியிருக்கிறது (139). இந்த மேகம் தன்னுடன் தலைவனை அழைத்து வந்திருந்தால் தலைவியின் நோய் தீர்ந்திருக்கும். அப்படி வராமல், தனியாக வந்து கேட்டது போல் இருப்பது சான்றோர்களின் செயலன்று. அதுமட்டுமா?
உடன் மான்று உரவு உரும் உரனும் நீரின்: ஒரு சேர மனங்க நின் இடித்து முழங்கும் தொழிலையுடைய குரல், வலிய இடியாய், நின் இடிநவில் குரல் முழங்கும் தன்மையாலே உன் குரல் வலிய இடியேறாக முழங்கும்…. அது என்ன செய்கிறது?
பரந்த பாம்பு மழுங்கல் அன்றியும் :எங்கும் பரவிய பாம்புகள் அஞ்சி, இடியேறுண்ட நாகம் போல என்பார்கள், அப்படி பயந்து தம் பரந்த பையை, படத்தை அச்சத்தினால் சுருக்கும். அப்படி உன்செயல் பாம்புகளை வலியடங்கச் செய்வதன்றி.
மாண்ட கனியா நெஞ்சத்தானும்.. பெருமை பொருந்திய என் தலைவனின் மனதைக் கனியச் செய்யவில்லை…
அதனால், நின் இடி நவில் குரல் இனிய அல்ல.. நின் குரல் எனக்கு இனிமையைச் செய்யவில்லை. தலைவன் வரவில்லையே என்ற நடுக்கத்தைத் தரவில்லை. ஏனெனில் அவர் நிச்சயமாகக் குறித்த காலத்தில் வந்துவிடுவார். எங்களைப் பயமுறுத்த நினைக்காதே. போய்விடு. என்று இந்தத் தோழி மேகத்தைப் பழிக்கும் விதமாகத் தலைவியைச் சமாதானப் படுத்துகிறாள்.
“சொன்ன காலத்தில் இன்னும் வராமையால் தலைவனின் நெஞ்சம் நஞ்சுடைப்பாம்பினும் கொடியது, கொஞ்சமும் கனிவிலாதது” என்றும் குறிப்பாகத் தலைவனை நொந்துகொள்கிறாள்.
இந்தப் பாடலை மறுபடியும் படியுங்கள்.

வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே
நற்றிணை : 238
கந்தரத்தனார்
திணை : முல்லை
துறை: தலைமகள் பருவங் கண்டு அழிந்தது

மேகமே! நினை மருள்வேனோ!

நற்றிணைக் காட்சி: 248
தீட்டியவர்: காசிபன் கீரன்

முன்பு இளந்திரையனார் தீட்டிய ஒரு அழகிய காட்சியைக் கண்டோம் அதிலே பருவந்தவறிய, வம்பு மாரியைப் பெய்த இந்த மணிநிற எழிலி மேகம் மடவது, அறியாமையால் செய்தது என்று, தோழி தலைவியைத் தேற்றினாள்.
இந்தக் காட்சியை மனக் கண்ணில் நான் ரசித்திருக்கும் வேளையில் இன்னொருவர் வந்து என் தோளைத் தட்டினார். “யாருங்க? அருமையான காட்சியைக் கலைத்து விட்டீங்களே” என்றேன். அதற்கு அவர் சொன்னார், “தம்பி நடராசனாரே, என் பெயர் காசிபன் கீரன், கீரனென்றால் நக்கீரரல்ல. அவர் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை வகித்தவர். அக்காலத்தில் கீரன் என்ற பெயரில் பல புலவர்களிருந்தமையால் அவர்களது பெயரை ஏதாவது அடை மொழியோடு சேர்த்துச் சொல்வார்கள். நான் காசிப கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணன். அதனால் எனக்குக் காசிபன் கீரனார் என்ற பெயர் அமைந்தது.”
“அப்படியா.. ஐயா! நீங்கள்தானே வம்பமாரியைப் பற்றி மிகுந்த நயத்துடன் அமைந்த பாடலைத் தந்தவர்?”
“ஆம் தம்பி வாருங்கள்…. பாருங்கள் இந்தக் காட்சியை”, என்று ஒரு பாடலைத் தந்துவிட்டு மறைந்தார். இவர் தீட்டிய காட்சியும், முன்புகண்ட “மடவ அம்ம” வகைதான்.
இங்கும் தலைவி முல்லைப் புதர்களின் அருகே வருத்தமுடன் தலைவன் வரவை நோக்கி அமர்ந்திருக்கிறாள். மழை வரப்போவதற்கு அறிகுறியாகப் பெருத்த இடியோசை அச்சம் தரும் வகையில் ஒலிக்கிறது. அருகேயமர்ந்துள்ள அவளது தோழி யாரையோ சாடிக் கொண்டிருக்கிறாள். அருகில் சென்று நன்றாகப் பார்த்தால் இங்கேயும் ஒரு மழை மேகம்தான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. பாவம். “மேகமே, உனக்கு எங்களைக் கண்டால் ஆகவில்லை. அதனால் வேண்டுமென்றே தவறான காலத்தில் பெரிதாக மழைபொழிந்து, பெருத்த இடியோசையால் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறாய். அதற்கு வேறு ஆளைப் பார்.” என்று மேகத்தைப் பழிக்கு முகமாகத் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். முதலில் பாடலைப் பார்ப்போம்.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறிவரி நல் மான் புகர்முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர் மன்” இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக்கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே.

தோழி சொல்கிறாள். “எங்கள் தலைவர் வேலை நிமித்தமாக எம்மைப் பிரிந்து செல்லும் போது, “நீர் எப்பொழுது வருவீர்” எனக் கேட்டோம்.

அதற்கு அவர் “வண் பெயல் கார் வருபருவம் என்றனர்”. மிக்க மழையுடைய கார்ப்பருவமன்றோ நாம் வரும் பருவம்” என்று கூறிப் பிரியா விடை பெற்றுப் போனார்.

கார்ப்பருவத்திற்கு அடையாளம் என்ன? மழை பெய்யும். முல்லை பூக்கும். சென்ற வாரமும் ‘மலரின் மெளவல்’ ‘முல்லைச் செடி உன் பற்களைப் போல அரும்பும்போது’ என்று தலைவன் தலைவியின் தலையில் பனி மழை பெய்தது நினைவிருக்கும்…. இங்கும் முல்லைதான் கார்காலத்திற்குக் குறிப்புக் காட்டுகிறது.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
சிறிய பூவையுடைய முல்லையின் தேன் மணம் கமழும் பசிய மலரெல்லாம்,
பொறி வரி நன்மான் புகர் முகம் கடுப்ப

நன்மான் என்றால் இங்கே யானையைக் குறிக்கும். யானைக்குப் பல பெயர்கள் உண்டு. யானை, மாதங்கம், கரி, கைமா, வேழம், பகடு, களிறு, நன்மான் ஆகியவை இவற்றுள் சில. நல்ல யானையின் முகத்தில் வெண்புள்ளிகளும், வரிகளும் அமைந்திருக்கும். அப்படியாகத் தோன்றுமாறு முல்லைப் புதரிலே மலர்கள் பூத்திருக்கும். புகர் என்றால் மத்தகப் புள்ளி.
தண்புதல் அணி பெற மலர…. இந்த மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பெறும்படி மலர என்றான் தலைவன். அந்த முல்லை மலர்தற்கு உவமை வேறு காட்டினான்.
சரி, இப்போது என்னவானது? தலைவன் இன்னும் வரவில்லை. சென்ற வேலை முடியவில்லை. அவன் குறித்த கார் காலமும் வரவில்லை. ஆனால், இந்த மேகம் இருக்கிறதே..அது என்ன செய்ததாம்?

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
பேர் அஞர் உள்ளம் என்றால் பெரிய துன்பம் பொருந்திய உள்ளம். தலைவனைப் பிரிந்தமையால வாடி நைந்த உள்ளம். அப்படியான சோர்ந்த உள்ளம் படைத்த தலைவி நடுங்குவதைக் நீ காண விரும்பினை. அதில் உனக்கு ஒரு அல்ப மகிழ்ச்சி. எதனால்?

அன்பு இன்மையின்
உனக்கு தலைவி மேல் அன்பில்லாததனால் அவளை நடுங்கி கலங்க வைக்கப் பார்க்கிறாய். அதனால் என்ன செய்தாய்?

பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர்குரல்
நீ பண்பில்லாத, இயல்பில்லாத காரியத்தைச் செய்தாய்.
பொய்யாக இடி இடித்து பெரிய ஓசை எழுப்பினாய் மழை வருமாற் போல இடி இடித்தாய். சரி இடித்துக் கொள் சத்தம் போடு. எங்களை யென்னவென்று நினைத்தாய்? இந்த பருவந்தவறிய இடியோசையை

“வாய் செத்து ஆலும் இன் மயில் மடக்கணம் போல” வாய் செத்து ஆலும் என்றால் வாய் செத்துப் போச்சுடா என்பார்களே …. அந்த மாதிரிப் பொருளல்ல. வாய் என்றால் வாய்மையென்று பொருள்; செத்து: கருதி; ஆலும்: கூவும் இல்லது அகவும். இடியோசை கேட்டு மயிலினங்கள் அகவும். இங்கே இந்த மடமையான மயிற் கூட்டம் இந்த இடியோசையைக் கேட்டு மழை வருமென தவறாகக் கருதி அகவும், ஆரவாரம் செய்தன. ஆனல் நாங்கள் உண்மை தெரிந்தவர்கள்.

நினை மருள்வேனோ
நாங்கள் பயந்து விடுவோமா? பயந்துவிடுவதென்றால் இடியோசையைக் கேட்டு பயந்து கொள்வதல்ல. தலைவன் கார்காலம் வருமுன்னே வருவேன் என்றாரே. இப்போது இடி இடித்து மழை வரவிருக்கிறதே. அவர் இன்னும் வரவில்லையே. அவருக்கு என்னவானதோ ஏதானதோ வென்று பயந்து கொள்வோமென்று நினைத்தாயானால் அது நடக்காது. ஏனெனில் எங்களுக்கு எம்தலைவர் மீதும் அவரது வாக்கின் மீதும் மிகுந்த நம்பிக்கையிருக்கிறது.

வாழியர் மழையே : மழையே நீ நல்லாயிரு. இது இகழ்ச்சியாகக் கூறப்பட்ட வாழ்த்து இப்படி ஒரு பண்பில்லாத காரியத்தைச் செய்கிறாயே. பொய்யாக இடித்து, மழைபெய்கிறாயே… நீ நல்லாயிரு. நீ உருப்படுவாயா?

உண்மையில் நடந்ததென்னவெனில் பருவந்தவறி இடியோசையுடன் மழை பெய்தது. இடியோசை கேட்டு மயில்கள் ஆரவாரம் செய்தன. தோழி தலைவியிடம் “இது உண்மையில் கார் காலமல்ல, இது பருவந்தவறிய மழை. நின் தலைவர் கார் காலத்தில் வருவார். இந்த மேகம்தான் உன்னிடம் அன்பில்லாமல் வம்பு செய்கிறது” என்று தேற்றுகிறாள். இந்த மிக்க நயமான காட்சியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர் முகம் கடுப்ப
தண்புகலணி பெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர்மன்னினிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பின்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்தாலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள்வேனோ வாழியர் மழையே.

நற்றிணை: 248
காசிபன் கீரனார்
திணை: முல்லை
துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.