அடடா! என்ன நல்ல மேகம்!

அடடா! என்ன நல்ல மேகம்!
காட்சி : 112
தீட்டியவர்: பெருங்குன்றூர் கிழார்

தலைவியைச் சமாதானம் செய்வதற்காக மேகத்தைப் பழிக்கும் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க,” என்னடாயிது, இந்த சங்க காலத்துப் பெண்களுக்கு வேறு வேலையே யில்லையா? காதலன் வெளியூர் போனவன் வருவானெனக் காத்து நிற்க வேண்டியது. மழைக் காலம் வந்தால் இன்னும் வரவில்லையேயென்று கவலைப் படவேண்டியது. இதுதான் தலைவியின் வேலை. அவளது தோழிப் பெண்ணுக்கும் அவளைத் தேற்றுவது தவிர வேறு வேலையில்லை போலும். ஏதாவது சமாதானம் சொல்லி தேற்றிக் கொண்டேயிருப்பது.” என்றெல்லாம் தோன்றியது. “இந்த சங்ககாலப் பெண்களிடம் மேகம் படும் பாடு பெரிய பாடுதான். இக்காலத்தில் தமிழ் நாட்டில் எல்லோரும் மழை வரவேண்டுமென்று மாரியை வேண்டி நின்றால், அக்காலத்தில் மாரியை வம்ப மாரியென்று திட்டுவதே வழக்கமாகிப் போனது. இப்படி சங்க காலத்து பெண்கள் மழையைத் திட்டித் திட்டித் தான் கோபம் கொண்ட மேகம் தமிழ் நாட்டில் அவ்வப்போது பிகு பண்ணுகின்றது போலும்” என்று எண்ணியவாறு நற்றிணைக் காலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு காட்சி! ஆ! யாரோ ஒருத்தி மழை மேகத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தாள்!!

இந்தக் காட்சியிலும் அதே மழைக்காலம், பருவம் வந்துவிடுமுன் வருவேன் என்று சொல்லி சென்று விட்டு இன்னும் வராத தலைவன். தோழி சொல்கிறாள்:

விருந்தெவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து, விரும்பி,
மாக்கடல் முகந்து, மணிநிறத்தருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப்பாய்
மலையிமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

இந்தப் பெண்கள் இருக்குமிடம் மலைப்பகுதி. மரங்களும் நீர் வீழ்சிகளும் அடர்ந்த இடம். அது எப்படியான மலைப் பக்கம் தெரியுமா?
சுரும்பு இமிர் அடுக்கம். சுரும்பு என்றால் வண்டினம். வண்டினம் முரலும் மலைப்பகுதி. வண்டுகள் மலரிருக்கும் இடம் தேடிவருமல்லவா? இங்கேயும்,
சாரல் அரும்பு அறமலர்ந்த
கருங்கால் வேங்கை சுரும்பு இமிர் அடுக்கம்…
மலைச்சாரல் முழுதும் அரும்புகள் மலர்ந்த, கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், வண்டினம் முரலும் மலைப்பக்கம். அப்படிப்பட்ட மலைப்பக்கத்தின் பெருமை என்ன?
அடுக்கம் புலம்ப, அந்த மலைப்பகுதியே அஞ்சும்படியாகக் களிறு அட்டு; களிறு என்றால் யானை. யானைக்குக் களிறு, பிடி, வேழம், கரிமா, கோட்டுமா, நன்மான், பகடு, மாதங்கம் என்றெல்லாம் பல பெயர்களுள்ளன. இங்கே களிறு என்பதை காட்டு யானையென்றும் கொள்ளலாம். அப்படியான களிற்றைக் கொன்று, அட்டு,
உரும்பில் உள்ளத்து அரிமா விளங்கும்: உரும்பில், என்பதை உருப்பு இல் என்று கொள்ள வேண்டும். உருப்பு என்றால் அச்சம். தமிழ் பாடல்களில் எதுகை, மோனை இவை மிகவும் இன்றியமையாததல்லவா? அதனால் உருப்பு என்பது உரும்பு என்று திரிந்தது என்று சொல்லுவார்கள். ஏனென்றால் முந்தைய வரி ‘சுரும்பு இமிர்’ என்று ஆரம்பிக்கிறது. சுரும்பும், உரும்பும் எதுகையாக அமைந்தது என்பார்கள். சரி, இங்கே களிற்றைக் கொன்று, அச்சமில்லாத உள்ளத்தோடு … என்பதிலிருந்து இந்தப் போராட்டம் அந்த மலைப்பகுதியையே நடுங்க வைக்கிறதாம். அப்படிப்பட்ட வீரமான நிகழ்ச்சிகள் நடக்கும் மலைக்கு உரியவன் நம் தலைவன்.
பெருங்கல் நாடன்… நாட்டுக் குடையவன் நாடன். பட்டிக்காட்டிலிருந்து வந்தவனை காடன் என்று சொல்லப் போய், அது காட்டானாக மாறி வழங்குவது நமக்குத் தெரியும். வீரமான சிங்கத்தைப் பற்றி சொன்னதால் இவனும் அதுபோல் பெரும் போர்வீரனாக விளங்குகிறான் என்றும் குறிப்பதாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.
சரி, தலைவனைப் பற்றி சொல்லியாயிற்று, இந்த மழை மேகம் என்ன செய்கிறது? இது ரொம்ப நல்ல மேகம். நற்றிணையில் வந்த மற்ற மேகங்களைப் போலல்ல. “சான்றோர் புரைவது அன்று” என்று திட்டு வாங்கிய மேகமல்ல. பிறர் நோயையும் தன்னோய் போலப் போற்றி அறனறியும் மேகம். இது இந்தத் தலைவனின் வரவை எப்படியோ அறிந்து கொண்டு விட்டதாம். அதாவது, மேகம் உயரத்திலிருந்து பார்த்து விட்டது போலும். உடனே, மகிழ்ச்சியினால், “தலைவன் வருவேன் என்றபடி வாக்குத் தவறாமல் வருகிறான்” என்று மகிழ்ந்தது. நாமெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தால் தலைகால் தெரியாமல் ஆடுவோமில்லையா? இந்த மேகம் மகிழ்ந்தால் என்னதான் செய்யும்?
மாக்கடல் முகந்து.. ஓடிப்போய் பெரிய கடலிலுள்ள நீரை உண்டு,
செறிந்தது: இங்கே வந்து மழையாகப் பெய்து தள்ளிவிட்டது. எப்படியென்றால்,
மணிநிறத்து அருவித் தாழ் நீர் நனந்தலை அமுந்து படப்பாய். மணிபோலும் வெண்மையான நிறம் கொண்ட அருவி தாழ்நீர்.. அருவி விழுகின்ற இடமெல்லாம் மளைபடுமாறு, அப்படியே அருவியையே மொத்தமாக மறைத்து, அமுந்து.. மழை அருவி நீரில் அமுந்துமாறு.. அவ்வளவு வேகமாகப் பெய்கிறது.. இன்னும்,
மலை இமைப்பது போல் மின்னி… மின்னலாக மின்னுகிறது. அதைப் பார்க்கையில் அந்த மலையே கண்ணை இமைப்பது போல இருக்கிறதாம்.
சிலை வல் ஏற்றொரு செரிந்த,
சிலையென்றால் ஒலி. ஏறு என்பது இடியைக் குறிக்கும். இப்படியாகத் தலைவர் வரும் சேதியை மிகவும் ஆரவாரமாகத் தெரிவிக்கிறது. மொத்தத்தில் சொல்லப் போனால் ஜோவென்று கொட்டித் தள்ளி விட்டது!
மழை பொழிந்தது நமக்குத் தலைவனின் வருகையை அறிவிக்க வேண்டியிருக்கலாம். பெரும் மழையாகப் பெய்தமை, தன் அளவிலா மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக்வும் இருக்கலாம். அல்லது, அப்பாடா இனி நம்மை இந்தப் பெண்கள் திட்ட மாட்டார்கள் என்ற மகிழ்ச்சியாலுமிருக்கலாம்!!!
இம்மழைக்கே விருந்து எவன் செய்கோ தோழி! தோழி இப்படித் தலைவன் வரவை முன்பே நமக்கு அறிவிக்கின்ற இம்மழைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று தோழி சொல்கிறாள்:
விருந்து எவன் செய்கோ என்றால் எவன் விருந்து போடுவான் என்பதல்ல. விருந்து என்பது இங்கே முகமன், கைம்மாறு, நன்றியெனப் பொருள்படும். எவன் செய்கோ.. என்ன செய்யக் கூடும்! வள்ளுவர் சொன்னார்
‘தினைத்துனை நன்றி செய்யினும் பனைத்துணையாகக் கொள்வர் பயந்தெரிவார். ‘
இந்தப் பெண் அப்படிப் பயன் தெரிந்த பெண் போலிருக்கிறது.

இப்படி இந்த பெண் மேகத்தைப் பாராட்டுவது போல் தலைவியைத் தேற்றுகிறாள். “இதோ மழை வந்துவிட்டது. உன் தலைவன் வருவதை அறிந்து உனக்குச் சொல்லும் முகமாகவே இந்தமழை வந்திருக்கிறது. அதனால் கவலையுறாதே.. விரைவில் வந்து விடுவான்” என்று குறிப்பால் தேற்றுகிறாள். “பகுத்தறிவில்லாத மேகம் கூட உன் தலைவன் வருவதை அறிந்து மகிழ்கிறது. ஆறறிஉடைய நீதான் வரவில்லை என்று வருத்தப்படுகிறாய்” என்று சொல்வதாகவும் உரைப்பார்கள்.

அப்பாடா, கடைசியாக மேகத்தின் உள்ளம் குளிர்ந்திருக்கும்!!!! ! மழைக்காலக் காட்சியை எப்படியெல்லாம் விளக்குகிறார்கள்? பார்த்தீர்களா? முன்பு, ‘மடவது அம்ம மணிநிற எழிலி’ என்ற பாடலில் ஒருத்தி “ இந்த மேகம் பருவம் தவறி, அவசரமாக கடல் நீரையுண்டு, பொறுக்காமல், மலைப்பக்கத்தில் நின்று, மழையாகப் பெய்து விட்டது! இது அறியாத மேகம், உன் தலைவன் வரவில்லை எனக் கவலைப்படாதே” என்று சொன்னாள். (இளந்திரையனார் இதை எழுதி வைத்தார்). இங்கேயோ, மற்றொருத்தி, “இந்த நல்ல மேகம் உன் தலைவன் வரவை அறிந்து மகிழ்வோடு, கடல் நீரைக் குடித்து, மின்னி இடியுடன் பெய்து உனக்கு செய்தி சொல்லி விட்டது.“என்று சொல்கிறாள். இப்பாடல்களை மீண்டும் மீண்டும் ஒப்பு நோக்கி மகிழுங்கள்.

இப்போது இந்தப் பாடலை மறுபடி படியுங்கள்:

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா விளங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந்தலை அழுந்து படப் பாய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்மழைக்கே?

நற்றிணை: 112
பாடியவர்: பெருங் குன்றூர்க்கிழார்
திணை: குறிஞ்சி
துறை: பருவ வரவின் கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

அருஞ்சொற்பொருள்.இமிர் – ஒலிக்கும். அடுக்கம் – மலைப் பக்கம். உருப்பு – அச்சம். அரிமா – சிங்கம். நனந்தலை – அகன்ற இடம். ஏறு – இடி. விருந்து – கைம்மாறு

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!

இனிய அல்ல நின் இடி நவில் குரலே!
நற்றிணை : 238
தீட்டியவர்: கந்தரத்தனார்

இந்தக் காட்சியிலும் அனுதாபத்திற்குகந்த மேகம் குற்றவாளியாக நிற்கிறது! இங்கேயும் வழக்கமான பல்லவிதான். தலைவன் பொருள் தேடச் சென்றான் செல்லும் போது மழைப் பருவத்திற்கு முன் வருவதாகச் சொல்லிச் சென்றான். மழைவருவதற்கு அறிகுறியாக இடி இடித்தது. தலைவியின் மனதில் இடி இறங்கியது. கவலைப்பட ஆரம்பித்தாள். அவளைத் தேற்று முகமாக தோழி வழக்கம் போல, எல்லா சங்க காலத்துப் பெண்களைப் போல மேகத்தைப் பழித்தாள். என்ன சொல்கிறாள். வாருங்கள் வந்து கேளுங்கள்..

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
“அவர் நிலை அறியுமோ ஈங்கு”என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே

வறம் கொல வீந்த கானத்து: வறட்சியாலே, கொடிய கோடை வறட்சியாலே பட்டுப்போன காட்டிலே..
வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம். பிடவம் என்றால் புதர் செடி. வண்டுகள் வாய்திறந்து தேனுண்ணுமாறு பிடவ மலர்கள் மலரும். இதை இப்படியும் கொள்ளலாம் -வண்டுகள் தம் வாய் திறந்து அதாவது இதழிகளை விரித்து வண்டுகள் தேனுண்ணுமாறு மலரும். அந்தப் பிடவமலர்கள் எப்படியிருக்கின்றன. சிறிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய ஆயர்மகளிர் கூடும் கூட்டம் போல இருக்கிறதாம்
குறும் பூங் கோதை மகளிர்.. பூங்கோதை யென்றால் பூக்களையுடைய கூந்தலுள்ளவள்.
குழூஉ நிரை கடுப்ப… கூடும் கூட்டம் போல …. அந்தப் பிடவ மலர்கள் பூத்துள்ளன. பிடவமலர்கள் இலைகளை உதிர்த்து தூர் தெரியாதபடி பூத்தலால்… கானகத்தை பூச்சூடிய மகளிராக உவமை சொல்லப்பட்டது. மாலை அந்தி.. அப்படிப்பட்ட மாலைப் பொழுதிலே
மால் அதர் நண்ணிய: நான் காம நோய் மிகக் கொள்ளுமாறு
பருவம் செய்த கருவி மாமழை! கார்ப் பருவத்தை தோற்றுவித்த மேகமே… கார்ப்பருவம் இன்னும் வரவில்லை… ஆனால் வரவைத்தது இந்த மேகமாம்.. இது மேகத்தின் தவறு.. இந்த மேகம் வேறென்ன செய்தது? தலைவனை அழைத்தல்லவா வந்திருக்கவேண்டும். அப்படியிராமல் தனியாக வந்து நிற்கிறது.
அவர் நிலை அறியுமோ ஈங்கென வருதல்.. “அவரது நிலையை அறிவாயோ என்பதுபோல” தனியாக வருகிறது இந்த மேகம். இன்னொரு பொருள். அவர் நிலை ஈங்கு அறி என வருதல்: “அவர் நிலைமையை நான் கூற இங்கு அறிந்து கொள். அவர் இன்னும் வரவில்லை என்பதுபோல வருதல்.
சான்றோர்ப் புரைவதோ அன்று… நல்லவர்கள் செயலை ஒத்ததாகாது… “பிறர் நோயையும் தன் நோய்போல் போற்றி அறனறிதல் சான்றோர்கட் கெல்லாம் கடன்” என்று கலித் தொகையில் சொல்லியிருக்கிறது (139). இந்த மேகம் தன்னுடன் தலைவனை அழைத்து வந்திருந்தால் தலைவியின் நோய் தீர்ந்திருக்கும். அப்படி வராமல், தனியாக வந்து கேட்டது போல் இருப்பது சான்றோர்களின் செயலன்று. அதுமட்டுமா?
உடன் மான்று உரவு உரும் உரனும் நீரின்: ஒரு சேர மனங்க நின் இடித்து முழங்கும் தொழிலையுடைய குரல், வலிய இடியாய், நின் இடிநவில் குரல் முழங்கும் தன்மையாலே உன் குரல் வலிய இடியேறாக முழங்கும்…. அது என்ன செய்கிறது?
பரந்த பாம்பு மழுங்கல் அன்றியும் :எங்கும் பரவிய பாம்புகள் அஞ்சி, இடியேறுண்ட நாகம் போல என்பார்கள், அப்படி பயந்து தம் பரந்த பையை, படத்தை அச்சத்தினால் சுருக்கும். அப்படி உன்செயல் பாம்புகளை வலியடங்கச் செய்வதன்றி.
மாண்ட கனியா நெஞ்சத்தானும்.. பெருமை பொருந்திய என் தலைவனின் மனதைக் கனியச் செய்யவில்லை…
அதனால், நின் இடி நவில் குரல் இனிய அல்ல.. நின் குரல் எனக்கு இனிமையைச் செய்யவில்லை. தலைவன் வரவில்லையே என்ற நடுக்கத்தைத் தரவில்லை. ஏனெனில் அவர் நிச்சயமாகக் குறித்த காலத்தில் வந்துவிடுவார். எங்களைப் பயமுறுத்த நினைக்காதே. போய்விடு. என்று இந்தத் தோழி மேகத்தைப் பழிக்கும் விதமாகத் தலைவியைச் சமாதானப் படுத்துகிறாள்.
“சொன்ன காலத்தில் இன்னும் வராமையால் தலைவனின் நெஞ்சம் நஞ்சுடைப்பாம்பினும் கொடியது, கொஞ்சமும் கனிவிலாதது” என்றும் குறிப்பாகத் தலைவனை நொந்துகொள்கிறாள்.
இந்தப் பாடலை மறுபடியும் படியுங்கள்.

வறம் கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மாமழை!
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்புபை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே
நற்றிணை : 238
கந்தரத்தனார்
திணை : முல்லை
துறை: தலைமகள் பருவங் கண்டு அழிந்தது

மடவது அம்ம! மணி நிற எழிலி!

நற்றிணைக் காட்சி: 316
தீட்டியவர்: இடைக்காடனார்

இந்தக் காட்சியிலே ஒரு அழகிய பெண்ணும் அவள் தோழியும் அமர்ந்திருக்கிறார்கள். அழகிய பெண்ணின் காதலன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். போகு முன் அங்கேயிருந்த ஒரு முல்லைக் கொடியைக் காட்டி “கண்ணே, இந்த முல்லை மலர்கள் அரும்பும்போது வந்து விடுவேன். கவலைப் படாதே” என்று தேற்றிச் சென்றான். கார்காலம் வந்தால் முல்லை பூக்கும். அதனால் கார்காலத்திற்கு முன் வந்து விடுவேன் என்று உறுதி கூறிப்போனவன் இன்னும் வரவில்லை. இந்தப் பைத்தியக்காரியோ அந்தச் முல்லைச்செடி அரும்புகிறதா, தலைவன் வருவதற்குக் காலமாகிவிட்டதா என்று வழி பார்த்துப் பார்த்து ஏங்கிக் கிடக்கிறாள்.

திடீரென்று கார்காலத்திற்கு அறிகுறியாக, மழை வந்தது. தலைவன் சொன்ன மாதிரியே முல்லைச் செடிகளும், இன்னும் பல்வேறு செடிகளும் அரும்பு விடத் தொடங்கிவிட்டன. இவற்றைக் கண்ட தலைவியின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அனலிடை இட்ட புழுவாகத் துடித்தாள். தன் காதலனின் வரவை எதிர்நோக்கி ‘அவன் இன்னும் வரவில்லையே’யென்று பரிவால் மெலிந்து வருந்துகிறாள். அவன் சொன்ன வார்த்தைகள் பொய்யாயினவோவென்று நடுங்கினாள்.
இதைக் கண்ட அவளது உற்ற தோழி “அம்ம, மழை பொழிகிறதேயென்று கவலைப்படாதே. இது தலைவனின் குற்றமல்ல. மலர்களின் தவறுமல்ல. இந்த முட்டாள் மேகத்தின் தவறு” என்று தலைவியைத் தேற்றுகிறாள்.

அதை எப்படிச் சொல்கிறாள்? இதைத் தெரிந்துகொள்ளவேண்டுமானால் நாம் இடைக்காடனார் என்ற பெரும் புலவரைக் கேட்க வேண்டும். இவர் இடைக்காடு என்னும் மலையாள நாட்டைச் சேர்ந்த பெரும் புலவராக இருக்கலாமென்று சொல்வார்கள்.. அதனால் அவர் பெயர் இடைக்காடனார். இவரது பாடல்கள் நற்றிணை, மற்றும் குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடனார் இந்தக் காட்சியிலே என்ன சொல்கிறார்? அவர் கொடுத்த நற்றிணைப் பாடல் இதோ:
மடவது அம்ம, மணிநிற எழிலி!
“மலரின் மெளவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்” என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர், தம்நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே
தோழி சொல்கிறாள்.
மடவது அம்ம மணிநிற எழிலி: எழிலியென்றால் மேகம். மணிநிற எழிலியென்றால் நீலமணி போன்ற நிறமுடைய கார்கொண்ட மேகம் என்று பொருள். மணி வண்ணன் என்று நீலநிறக் கண்ணனைச் சொல்லுகிறோமல்லவா. “அம்மா, இந்த மிகவும் அழகான மேகம்தான். ஆனாலும் ஏதோ தெரியாமல் இப்படி ஒரு பெரிய தவறு செய்து விட்டது. கவலைப்படாதே” என்று தேற்றினாள். முதல் வரியிலேயே சுருக்கமாகத் தன் கருத்தை சொல்லிவிட்டாள். பிறகு சொல்கிறாள்.
“வெளியூர் போகுமுன் உன் காதலர் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா.”
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி:
“அதோ அந்த முல்லைப் புதரை குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்”. மௌவல் என்றால் முல்லை. அவர் விடை பெறும் பருவத்தில் அந்த முல்லைச் செடி இன்னும் பூத்திருக்க வில்லை. இன்னும் பூக்காத முல்லையாதலால்,
மலர் இன் மௌவல், மலரில்லாத முல்லைச்செடி அல்லது முல்லைப் புதர். “அந்தச் செடியைக் காட்டி உனது காதலன் சொன்ன வார்த்தைகளென்ன? நினைவிருக்கிறதா?”
அம்ம, கயல் ஏர் உண் கண் கனங்குழை! மீனைப் போன்ற மையுண்ட கண்களையும், (காதிலே) கனவிய அதாவது கனமான பெருத்த குழையையும் அணிந்தவளே!
இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்
“இந்த முல்லை உன் பற்கள் போல அழகிய அரும்புகளை யீனும்பொழுது நான் உன்னை வந்தடைவேன்.” முல்லை தலைவியின் பற்கள் போல அரும்புகளையீனும் என்பதால், தலைவியின் பல்வரிசை முல்லை அரும்புகளைக் காட்டிலும் அழகுடையது என்று குறிப்பு. எயிறு என்றால் பல் நிற்கும் தசை, ஆங்கிலத்திலே gums என்று சொல்வார்கள். காதலர் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தார்?
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்த: அகலமான ஆகாயத்திலே எழுந்த மதியோ? எனப் பார்ப்பவர்கள் ஐயுறும் வண்ணம் பொருந்திய
நின் நல் நுதல் நீவிச் சென்றார்: உன் அழகிய நெற்றியைத் காதலுடன் தடவிக்கொடுத்துச் சென்றார். ஆனால் சென்ற இடத்தில் அவர் வேலை இன்னும் முடியவில்லை போலும்.
நம் நசை வாய்த்து வரல்: நம் மேல் உண்மையான விருப்பம் கொண்டு ( உண்மையான காதலுடன்) வரவேண்டியிருந்தும்,
வாரா அளவை: வராமல் அல்லது வரமுடியாமல் அங்கிருக்கும் பொழுது முல்லை பூக்கலாமா? கார்காலம்தான் வரலாகுமா? வரக்கூடாதுதான். ஆனால் இந்தப் பாழும் மேகம் என்ன செய்தது தெரியுமா?
அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து: தலைவர் வரவேண்டிய வழியையுடைய அதோ அந்த மலைமேலே, கல்மிசை, மலைப்பக்கமெல்லாம் நீர்க்கால் இறங்கி
தளி தரு: நீர்த்துளையைத் தருகின்ற
தண் கார் தலைஇ: இந்த, தண்ணிய மேகம் கூடி
வியல் இடத்து: பரந்த வானத்திலே
விளி இசைத்தன்று: பெரிய ஆரவாரத்தைச் செய்தது. இடியிடிப்பதைச் செய்யா நின்றது.

அதாவது, மலைப்பக்கமெல்லாம் மறைந்து போகுமாறு, இடியிடித்து மழை பொழிந்தது. மழை பெய்ததனால் முல்லை பூத்தது. அவ்வளவுதான். இது இந்த மேகத்தின் அறியாமையால் வந்தது. இது உன் காதலர் குறித்த கார்காலமல்ல. “உண்மையில் இது அவர் குறித்த கார்காலமாயின், அவர் நிச்சயம் வந்திருப்பார். அவர் ஒரு நாளும் பொய் கூறமாட்டார். கவலைப்படாதே” என்று தோழி தேற்றுகிறாள்.
இப்படியாக மழைபெய்தாலும் கூட, இது கார்ப் பருவமன்று என்று கூறும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. குறுந்தொகையில் ஒரு பெண் சொல்வாள், “ வானமோ இது கார்ப் பருவமென்று காட்டுகிறது. ஆனாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஏனெனில் என் காதலர் ஒருநாளும் பொய்யுரைக்க மாட்டார். வாக்குத் தவற மாட்டார். அதனால் அவர் குறித்த கார் காலம் இதுவல்ல” என்று தீர்மானமாகச் சொன்னாள்.
இப்படித்தான் இன்னுமொரு பெண் “ இந்தக் கானகம் பல மலர்களைப் பிளந்து காட்டி இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது என்று கூறினாலும், அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஏனெனில், என் தலைவர் ஒருக்காலும் பொய்யுரைக்க மாட்டார்” என்று சொன்னதாக, ஓதலாந்தையார் எனும் புலவர் பாடிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது. “கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே “(குறுந்தொகை 21)
இக்காலக் காதலில் இந்த நம்பிக்கையிருக்கிறதா?

இப்பொழுது மறுபடியும் இந்தப் பாடலைப் படியுங்கள். சுவையுங்கள்.
மடவது அம்ம மணிநிற எழிலி
மலரின் மெளவல் நலம் வரக் காட்டி
கயலேர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறேர் பொழுதின் ஏய்தருவேமென
கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்தநின்
நன்னுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாராவளவை அத்தக்
கல்மிசையடுக்கம் புதையக் கால் வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியலிடத்தானே .
நற்றிணை பாடல் எண்: 316
திணை: முல்லை
பாடியவர்: இடைக்காடனார்

மேகமே! நினை மருள்வேனோ!

நற்றிணைக் காட்சி: 248
தீட்டியவர்: காசிபன் கீரன்

முன்பு இளந்திரையனார் தீட்டிய ஒரு அழகிய காட்சியைக் கண்டோம் அதிலே பருவந்தவறிய, வம்பு மாரியைப் பெய்த இந்த மணிநிற எழிலி மேகம் மடவது, அறியாமையால் செய்தது என்று, தோழி தலைவியைத் தேற்றினாள்.
இந்தக் காட்சியை மனக் கண்ணில் நான் ரசித்திருக்கும் வேளையில் இன்னொருவர் வந்து என் தோளைத் தட்டினார். “யாருங்க? அருமையான காட்சியைக் கலைத்து விட்டீங்களே” என்றேன். அதற்கு அவர் சொன்னார், “தம்பி நடராசனாரே, என் பெயர் காசிபன் கீரன், கீரனென்றால் நக்கீரரல்ல. அவர் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை வகித்தவர். அக்காலத்தில் கீரன் என்ற பெயரில் பல புலவர்களிருந்தமையால் அவர்களது பெயரை ஏதாவது அடை மொழியோடு சேர்த்துச் சொல்வார்கள். நான் காசிப கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணன். அதனால் எனக்குக் காசிபன் கீரனார் என்ற பெயர் அமைந்தது.”
“அப்படியா.. ஐயா! நீங்கள்தானே வம்பமாரியைப் பற்றி மிகுந்த நயத்துடன் அமைந்த பாடலைத் தந்தவர்?”
“ஆம் தம்பி வாருங்கள்…. பாருங்கள் இந்தக் காட்சியை”, என்று ஒரு பாடலைத் தந்துவிட்டு மறைந்தார். இவர் தீட்டிய காட்சியும், முன்புகண்ட “மடவ அம்ம” வகைதான்.
இங்கும் தலைவி முல்லைப் புதர்களின் அருகே வருத்தமுடன் தலைவன் வரவை நோக்கி அமர்ந்திருக்கிறாள். மழை வரப்போவதற்கு அறிகுறியாகப் பெருத்த இடியோசை அச்சம் தரும் வகையில் ஒலிக்கிறது. அருகேயமர்ந்துள்ள அவளது தோழி யாரையோ சாடிக் கொண்டிருக்கிறாள். அருகில் சென்று நன்றாகப் பார்த்தால் இங்கேயும் ஒரு மழை மேகம்தான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. பாவம். “மேகமே, உனக்கு எங்களைக் கண்டால் ஆகவில்லை. அதனால் வேண்டுமென்றே தவறான காலத்தில் பெரிதாக மழைபொழிந்து, பெருத்த இடியோசையால் எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறாய். அதற்கு வேறு ஆளைப் பார்.” என்று மேகத்தைப் பழிக்கு முகமாகத் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். முதலில் பாடலைப் பார்ப்போம்.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறிவரி நல் மான் புகர்முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர் மன்” இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர்குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக்கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே.

தோழி சொல்கிறாள். “எங்கள் தலைவர் வேலை நிமித்தமாக எம்மைப் பிரிந்து செல்லும் போது, “நீர் எப்பொழுது வருவீர்” எனக் கேட்டோம்.

அதற்கு அவர் “வண் பெயல் கார் வருபருவம் என்றனர்”. மிக்க மழையுடைய கார்ப்பருவமன்றோ நாம் வரும் பருவம்” என்று கூறிப் பிரியா விடை பெற்றுப் போனார்.

கார்ப்பருவத்திற்கு அடையாளம் என்ன? மழை பெய்யும். முல்லை பூக்கும். சென்ற வாரமும் ‘மலரின் மெளவல்’ ‘முல்லைச் செடி உன் பற்களைப் போல அரும்பும்போது’ என்று தலைவன் தலைவியின் தலையில் பனி மழை பெய்தது நினைவிருக்கும்…. இங்கும் முல்லைதான் கார்காலத்திற்குக் குறிப்புக் காட்டுகிறது.

சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
சிறிய பூவையுடைய முல்லையின் தேன் மணம் கமழும் பசிய மலரெல்லாம்,
பொறி வரி நன்மான் புகர் முகம் கடுப்ப

நன்மான் என்றால் இங்கே யானையைக் குறிக்கும். யானைக்குப் பல பெயர்கள் உண்டு. யானை, மாதங்கம், கரி, கைமா, வேழம், பகடு, களிறு, நன்மான் ஆகியவை இவற்றுள் சில. நல்ல யானையின் முகத்தில் வெண்புள்ளிகளும், வரிகளும் அமைந்திருக்கும். அப்படியாகத் தோன்றுமாறு முல்லைப் புதரிலே மலர்கள் பூத்திருக்கும். புகர் என்றால் மத்தகப் புள்ளி.
தண்புதல் அணி பெற மலர…. இந்த மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பெறும்படி மலர என்றான் தலைவன். அந்த முல்லை மலர்தற்கு உவமை வேறு காட்டினான்.
சரி, இப்போது என்னவானது? தலைவன் இன்னும் வரவில்லை. சென்ற வேலை முடியவில்லை. அவன் குறித்த கார் காலமும் வரவில்லை. ஆனால், இந்த மேகம் இருக்கிறதே..அது என்ன செய்ததாம்?

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
பேர் அஞர் உள்ளம் என்றால் பெரிய துன்பம் பொருந்திய உள்ளம். தலைவனைப் பிரிந்தமையால வாடி நைந்த உள்ளம். அப்படியான சோர்ந்த உள்ளம் படைத்த தலைவி நடுங்குவதைக் நீ காண விரும்பினை. அதில் உனக்கு ஒரு அல்ப மகிழ்ச்சி. எதனால்?

அன்பு இன்மையின்
உனக்கு தலைவி மேல் அன்பில்லாததனால் அவளை நடுங்கி கலங்க வைக்கப் பார்க்கிறாய். அதனால் என்ன செய்தாய்?

பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர்குரல்
நீ பண்பில்லாத, இயல்பில்லாத காரியத்தைச் செய்தாய்.
பொய்யாக இடி இடித்து பெரிய ஓசை எழுப்பினாய் மழை வருமாற் போல இடி இடித்தாய். சரி இடித்துக் கொள் சத்தம் போடு. எங்களை யென்னவென்று நினைத்தாய்? இந்த பருவந்தவறிய இடியோசையை

“வாய் செத்து ஆலும் இன் மயில் மடக்கணம் போல” வாய் செத்து ஆலும் என்றால் வாய் செத்துப் போச்சுடா என்பார்களே …. அந்த மாதிரிப் பொருளல்ல. வாய் என்றால் வாய்மையென்று பொருள்; செத்து: கருதி; ஆலும்: கூவும் இல்லது அகவும். இடியோசை கேட்டு மயிலினங்கள் அகவும். இங்கே இந்த மடமையான மயிற் கூட்டம் இந்த இடியோசையைக் கேட்டு மழை வருமென தவறாகக் கருதி அகவும், ஆரவாரம் செய்தன. ஆனல் நாங்கள் உண்மை தெரிந்தவர்கள்.

நினை மருள்வேனோ
நாங்கள் பயந்து விடுவோமா? பயந்துவிடுவதென்றால் இடியோசையைக் கேட்டு பயந்து கொள்வதல்ல. தலைவன் கார்காலம் வருமுன்னே வருவேன் என்றாரே. இப்போது இடி இடித்து மழை வரவிருக்கிறதே. அவர் இன்னும் வரவில்லையே. அவருக்கு என்னவானதோ ஏதானதோ வென்று பயந்து கொள்வோமென்று நினைத்தாயானால் அது நடக்காது. ஏனெனில் எங்களுக்கு எம்தலைவர் மீதும் அவரது வாக்கின் மீதும் மிகுந்த நம்பிக்கையிருக்கிறது.

வாழியர் மழையே : மழையே நீ நல்லாயிரு. இது இகழ்ச்சியாகக் கூறப்பட்ட வாழ்த்து இப்படி ஒரு பண்பில்லாத காரியத்தைச் செய்கிறாயே. பொய்யாக இடித்து, மழைபெய்கிறாயே… நீ நல்லாயிரு. நீ உருப்படுவாயா?

உண்மையில் நடந்ததென்னவெனில் பருவந்தவறி இடியோசையுடன் மழை பெய்தது. இடியோசை கேட்டு மயில்கள் ஆரவாரம் செய்தன. தோழி தலைவியிடம் “இது உண்மையில் கார் காலமல்ல, இது பருவந்தவறிய மழை. நின் தலைவர் கார் காலத்தில் வருவார். இந்த மேகம்தான் உன்னிடம் அன்பில்லாமல் வம்பு செய்கிறது” என்று தேற்றுகிறாள். இந்த மிக்க நயமான காட்சியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர் முகம் கடுப்ப
தண்புகலணி பெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர்மன்னினிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பின்மையின் பண்பில பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்தாலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள்வேனோ வாழியர் மழையே.

நற்றிணை: 248
காசிபன் கீரனார்
திணை: முல்லை
துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.

சங்க காலம்

சங்க காலம்
சங்க இலக்கியங்களிலே, எட்டுத்தொகைத் தொகுப்பிலே முதலாகச் சொல்லப்பட்ட நற்றிணை என்ற தொகுப்பிலிருந்து சில சுவையான காட்சிகளைக் கண்டு ரசித்திருந்தேன். அதுவோ மழைக்காலம், மரங்களெல்லாம் பூத்துக் குலுங்கும் கோலம். இந்த மனதிற்கு மிகவும் இனிதான சூழலிலே, மாலைப்பொழுதினிலே பல அழகிய இளம் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தன்னுடைய கடமையைத் தவறாக அல்லது தவறாது செய்து வரும் மழை மேகத்தை அவரவர் கருத்துப்படியும், நோக்கப்படியும், பழித்தும், ஏசியும், தமது தலைவர்கள் இன்னும் வராத வருத்தத்தை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கத்திலே வயதான பெண்கள், அன்னைமார்கள் போலும், பலவிதமான பூசைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இங்கே என்னதான் நடக்கிறது என்று நான் யோசித்தபடி சங்க காலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு மலைப் பகுதியில் இரு பெண்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தனர். ஒருத்தி (தலைவி போலும்) மிகவும் வாட்டமாகவிருந்தாள். மற்றொருத்தியோ முகத்தில் நம்பிக்கையும், புத்துணர்வுமாக விளங்கி, எதோ சொல்லித் தலைவியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். அட! தலைவன் வந்து விட்டான் போலிருக்கிறது. அந்தச் செய்தியைத்தான் சொல்கிறாள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். உடனே அருகில் ஒரு குரல் கேட்டது.
“இல்லை. நடராசனாரே.. இந்த அழகிய பெண்கள் தம் தலைவன் இன்னும் வாராமையால் மனம் சோர்ந்து, பசலை கொண்டு வாடுகின்றார்கள். அவர்களை அவர்தம் அன்பான தோழியர் தேற்றிக் கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் இங்கு நீர் காண்கிறீர்”
யாரென்று திரும்பிப் பார்த்தால், அட அவர்தான் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் தலைசாய்த்து வணங்கும், வணங்க வேண்டிய, பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்கள். இவர்தான் நற்றிணைக்கு முதன் முதலாக உரை எழுதியவர்.
“ஐயா, நற்றமிழ் முழுதும் கற்றறிந்த பெருமானே. இந்தப் பெண்கள் அப்படி என்னதான் நொந்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “தம்பி, காட்சி ஒன்றானாலும், பல்வேறு சங்கப் புலவர்கள் அவரவர் கற்பனைக்கேற்பத் தெளிந்த பாடல்களாகப் பாடியுள்ளனர். இதோ இந்த நற்றிணை என்ற தொகுப்பைப் படித்துப்பார்” என்று கொடுத்தார்.
“தம்பி, இப்பாடல்களில் எதுகை மோனை யிரா; அணிகளும் உவமைகளும் கொட்டிக் கிடக்க மாட்டா. அனைத்துப் பாடல்களும் ஆசிரியப்பா வகையினாலே அமைந்தவை. ஆனால், உள்ளதை உள்ளபடி, தெளிவாகச், சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு இரசிக்கும் தன்மைத்தாக இருக்கும். நவில் தொறும் நூல் நயம் போலும் என்றாற்போல், அவற்றைப் படிக்கப் படிக்க, இப்பாடல்களைப் பற்றி நினைக்க நினைக்க நீயே அவைகளின் அருமையை உணர்வாய் “ என்றார் பின்னத்தூரார்.
நற்றிணை முதலான சங்கநூல்களையும் அவற்றிற்கு உரையும் எழுதிச் சங்கத்தமிழ் காத்த தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாத ஐயர், பின்னத்தூரார் என்று அன்புடன் அழைக்கப்படும் நாராயணசாமி ஐயரவர்கள், மற்றும் சங்க இலக்கியங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழறிஞர்களை மனதில் நினத்த வண்ணம், சங்க காலக் காட்சிகளை மேற்கொண்டு ரசிக்கத் தொடங்கினேன். நான் ரசித்த காட்சிகளை மற்ற தமிழன்பர்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசையினாலே, பல இணைய தளங்களிலும், வட்டங்களிலும் அளித்தவற்றை இங்கே தமிழறிஞர்கள் முன் பணிவுடனும் வணக்கத்துடனும் வைக்கின்றேன்.

மடவ அம்ம மலர்கள்!! நற்றிணைக் காட்சி: 99

மடவ அம்ம மலர்கள்!!
நற்றிணைக் காட்சி: 99
தீட்டியவர்: இளந்திரையனார்

வாடிய தலைவி, உற்சாகத்துடன் அவளைத் தேற்றும் தோழி, மழை, அரும்பியுள்ள முல்லை மலர்கள், இன்னும் வராத தலைவன் – இந்தக் காட்சியமைப்பு நாம் முன்பே பல பாடல்களில் பார்த்ததுதான். இங்கு தோழி சொல்லும் சமாதானம்தான் புதுமையானது.
முன்பு இந்த மேகம்தான் மடமையானது என்று சமாதானப்படுத்தினாள் ஒரு தோழி. இங்கே இன்னொரு தோழி மலர்கள் ஏன் மலர்ந்தன, அதில் மேகத்தின் பங்கு என்ன என்பதற்கு ஒரு அருமையான காரணம் கூறுகிறாள். முதலில் பாடலைப் படிப்போம்.

“நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?” என்றிசின் – மடந்தை! – மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.

தோழி சொல்கிறாள்.
மடந்தை! நம் தலைவர் மேற்கொண்டுள்ள பயணம் அவ்வளவு எளிதானதா.
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – தண்ணிதாகிய நீர்மை அதாவது ஈரப்பசை கொஞ்சங்கூட இல்லாததாகிய வறண்ட, சென்று கடக்க முடியாத, நீண்ட நெறியில்.
துகில் விரித்தன்ன வெயில்: வெள்ளை வெளேரென்று வெண்மையான ஆடையை விரித்தாற்போன்ற வெயில் அடிக்கிறது.
அவிர் உருப்பின் அஞ்சு வரப் பனிக்கும்: வெப்பமோ மிகவும் அதிகமாக இருக்கிறது. கொடிய வெப்பத்தோடு அந்த வெய்யில் காண்பவர் அஞ்சும்படியாக இருக்கும்.
வெஞ்சுரம் இறந்தோர்: அப்படியான கொடுமையான கானகத்தின் கண்ணே சென்ற நம் தலைவர். சுரம் என்றால் காடு. இறந்தோர் என்றால் சென்றவர். ஆக நம் தலைவர் சென்றிருப்பதோ எளிதான வழியல்ல. உன்பொருட்டு அவர் பொருள் தேட அத்துணைக் கடினமான பாதையில் சிறிதும் அஞ்சாமல் சென்றிருக்கிறார்.
தாம் வரத் தெளித்த பருவம் காண் வர இதுவோ என்றிசின்
முன்பொரு பாடலில் தலைவன் குறிப்பாக ஒரு முல்லைச் செடியைக் காட்டி, இம்முல்லையரும்பும்போது நான் வந்துவிடுவேனென்று சொன்னதாகப் படித்தோம். இங்கே தலைவன் தான் வருவதாகக் கார்காலத்தை, மழைக் காலத்தைச் சுட்டிக் காட்டியிருந்தான். இப்பொழுது மழை பெய்திருக்கிறது. மலர்கள் மலர்ந்து கார் காலத்திற்குக் கட்டியங் கூறுகின்றன. அதனால் நீ மிகவும் கவலையுறுகிறாய்.
தலைவியே, அதனால் “நம் தலைவர் வருவதாகச் சொன்ன காலம் இதுதானா என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள்.
தலைவர் வருவதாகச் சொன்ன பருவம் இதுவல்ல. பின் ஏன் மழை பெய்கிறது, மலர்கள் மலர்கின்றன என்றெல்லாம் கேட்கிறாயா?”
“ முதலில் இந்த மேகம் ஒரு தவறு செய்தது. பருவகாலம் இன்னும் வரவில்லையென்பதை மறந்து அறியாமல் அளவுக்கு மீறி கடல் நீரைக் குடித்து விட்டது. நிறையத் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும். அதன் மடி நிறைந்து விட்டது!!”
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை. கமம் என்றால் நிறைந்து விட்ட என்று பொருள். மடி நிறைந்தால் என்ன செய்யும் பாவம்?
பொறுத்தல் செல்லாது: கொஞ்சங்கூடப் பொறுக்க முடியாமல்
இறுத்த வண் பெயல்: அவசரமாகப் பெய்து தள்ளிவிட்டது பெரு மழையாக! அதைப் பார்த்த மலர்ச் செடிகள் என்ன செய்தன? அவற்றிற்காவது இது கார் காலமில்லை. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிய வேண்டாமோ?
கார் என்று அயர்ந்த உள்ளமொடு: இது மழைப் பருவம் என்று மயங்கிய உள்ளமொடு, கார்காலமென்று நினைத்துக் கொண்டு,
தேர்வு இல பிடவமும், கொன்றையும், கோடலும் – ஆராயதனவாய், “இது ஒரு வேளை காலம் தவறிய மழையோ? அதாவது வம்ப மாரியோ?” என்றெல்லாம் யோசனை செய்யாது புதர்ச் செடிகளும், கொன்றையும், காந்தளும் பூத்தன. முதலில் முல்லைப் புதர் மலர்ந்தது. அதைப் பார்த்து அவசரமாக கொன்றையும், காந்தளும் “ ஓகோ, மழைக்காலம் வந்து விட்டதோ” வென்று மலரவும்,
மடவ ஆதலின் மலர்ந்தன பலவே – அறிவற்றனவாதலின் அப்பக்கத்திலுள்ள மற்ற மலர்களும் மலர்ந்து நின்றன. அவை அஃறிணைப் பொருட்களாகையால் அறியாமையால் மிகுதியாகப் பூத்து விட்டன.
“அவற்றைக் கண்டு நீ கார் காலமென்று மனம் மயங்காதே. இது கார்காலம் போலத் தோன்றினாலும் இது நம் தலைவர் கூறிய பருவமன்று. அவர் சென்ற வழி வெய்யில் மிக்கது என்றாலும், கார்ப் பருவம் வருவதை அவர் அறிவார். இது வம்ப மாரி ( பருவம் தவறிய மழை) காரல்ல. அவர் பொய்யுரைக்க மாட்டார். குறித்த பருவத்தில் வந்துவிடுவார். கவலைப் படாதே.” என்று தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கார்காலம் வந்துவிட்டது. வருவதாகச் சொன்ன தலைவன்தான் இன்னும் வரவில்லை. வேறு வழியொன்றும் தோன்றாமையால் எப்படியாவது தலைவியைச் சமாதானப்படுத்துவதற்காக இப்படி ஒரு கற்பனையான விளக்கத்தைத் தருகிறாள் இத்தோழி!

நீர் அற வறந்த நிரம்பா நீளிடைத்
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தான்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் – மடந்தை! மதி இன்று
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமுங் கொன்றையுங்கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.
நற்றிணை: 99
பாடியவர்: இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை: பருவங்கண்டாற்றாளாகிய தலைவியைத் தோழி பருவமன்றென்று மறுத்தது.

குறுந்தொகையிலும், இப்படித்தான் ஒரு தோழி இது வம்ப மாரி, பருவம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை, கார் காலமல்ல. கொன்றை மலர் அறியாமையால் பருவம் தவறிப் பூத்து விட்டது என்று தேற்றுகிறாள் !
மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை
கல் பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெறி தரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே ( குறுந்தொகை 66)