Tag Archives: ettuth thogai

சங்க காலம்

சங்க காலம்
சங்க இலக்கியங்களிலே, எட்டுத்தொகைத் தொகுப்பிலே முதலாகச் சொல்லப்பட்ட நற்றிணை என்ற தொகுப்பிலிருந்து சில சுவையான காட்சிகளைக் கண்டு ரசித்திருந்தேன். அதுவோ மழைக்காலம், மரங்களெல்லாம் பூத்துக் குலுங்கும் கோலம். இந்த மனதிற்கு மிகவும் இனிதான சூழலிலே, மாலைப்பொழுதினிலே பல அழகிய இளம் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தன்னுடைய கடமையைத் தவறாக அல்லது தவறாது செய்து வரும் மழை மேகத்தை அவரவர் கருத்துப்படியும், நோக்கப்படியும், பழித்தும், ஏசியும், தமது தலைவர்கள் இன்னும் வராத வருத்தத்தை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கத்திலே வயதான பெண்கள், அன்னைமார்கள் போலும், பலவிதமான பூசைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இங்கே என்னதான் நடக்கிறது என்று நான் யோசித்தபடி சங்க காலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு மலைப் பகுதியில் இரு பெண்கள் மட்டும் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தனர். ஒருத்தி (தலைவி போலும்) மிகவும் வாட்டமாகவிருந்தாள். மற்றொருத்தியோ முகத்தில் நம்பிக்கையும், புத்துணர்வுமாக விளங்கி, எதோ சொல்லித் தலைவியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள். அட! தலைவன் வந்து விட்டான் போலிருக்கிறது. அந்தச் செய்தியைத்தான் சொல்கிறாள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். உடனே அருகில் ஒரு குரல் கேட்டது.
“இல்லை. நடராசனாரே.. இந்த அழகிய பெண்கள் தம் தலைவன் இன்னும் வாராமையால் மனம் சோர்ந்து, பசலை கொண்டு வாடுகின்றார்கள். அவர்களை அவர்தம் அன்பான தோழியர் தேற்றிக் கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் இங்கு நீர் காண்கிறீர்”
யாரென்று திரும்பிப் பார்த்தால், அட அவர்தான் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் தலைசாய்த்து வணங்கும், வணங்க வேண்டிய, பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்கள். இவர்தான் நற்றிணைக்கு முதன் முதலாக உரை எழுதியவர்.
“ஐயா, நற்றமிழ் முழுதும் கற்றறிந்த பெருமானே. இந்தப் பெண்கள் அப்படி என்னதான் நொந்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “தம்பி, காட்சி ஒன்றானாலும், பல்வேறு சங்கப் புலவர்கள் அவரவர் கற்பனைக்கேற்பத் தெளிந்த பாடல்களாகப் பாடியுள்ளனர். இதோ இந்த நற்றிணை என்ற தொகுப்பைப் படித்துப்பார்” என்று கொடுத்தார்.
“தம்பி, இப்பாடல்களில் எதுகை மோனை யிரா; அணிகளும் உவமைகளும் கொட்டிக் கிடக்க மாட்டா. அனைத்துப் பாடல்களும் ஆசிரியப்பா வகையினாலே அமைந்தவை. ஆனால், உள்ளதை உள்ளபடி, தெளிவாகச், சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு இரசிக்கும் தன்மைத்தாக இருக்கும். நவில் தொறும் நூல் நயம் போலும் என்றாற்போல், அவற்றைப் படிக்கப் படிக்க, இப்பாடல்களைப் பற்றி நினைக்க நினைக்க நீயே அவைகளின் அருமையை உணர்வாய் “ என்றார் பின்னத்தூரார்.
நற்றிணை முதலான சங்கநூல்களையும் அவற்றிற்கு உரையும் எழுதிச் சங்கத்தமிழ் காத்த தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாத ஐயர், பின்னத்தூரார் என்று அன்புடன் அழைக்கப்படும் நாராயணசாமி ஐயரவர்கள், மற்றும் சங்க இலக்கியங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழறிஞர்களை மனதில் நினத்த வண்ணம், சங்க காலக் காட்சிகளை மேற்கொண்டு ரசிக்கத் தொடங்கினேன். நான் ரசித்த காட்சிகளை மற்ற தமிழன்பர்களும் ரசிக்க வேண்டுமென்ற ஆசையினாலே, பல இணைய தளங்களிலும், வட்டங்களிலும் அளித்தவற்றை இங்கே தமிழறிஞர்கள் முன் பணிவுடனும் வணக்கத்துடனும் வைக்கின்றேன்.

மடவ அம்ம மலர்கள்!! நற்றிணைக் காட்சி: 99

மடவ அம்ம மலர்கள்!!
நற்றிணைக் காட்சி: 99
தீட்டியவர்: இளந்திரையனார்

வாடிய தலைவி, உற்சாகத்துடன் அவளைத் தேற்றும் தோழி, மழை, அரும்பியுள்ள முல்லை மலர்கள், இன்னும் வராத தலைவன் – இந்தக் காட்சியமைப்பு நாம் முன்பே பல பாடல்களில் பார்த்ததுதான். இங்கு தோழி சொல்லும் சமாதானம்தான் புதுமையானது.
முன்பு இந்த மேகம்தான் மடமையானது என்று சமாதானப்படுத்தினாள் ஒரு தோழி. இங்கே இன்னொரு தோழி மலர்கள் ஏன் மலர்ந்தன, அதில் மேகத்தின் பங்கு என்ன என்பதற்கு ஒரு அருமையான காரணம் கூறுகிறாள். முதலில் பாடலைப் படிப்போம்.

“நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?” என்றிசின் – மடந்தை! – மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.

தோழி சொல்கிறாள்.
மடந்தை! நம் தலைவர் மேற்கொண்டுள்ள பயணம் அவ்வளவு எளிதானதா.
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – தண்ணிதாகிய நீர்மை அதாவது ஈரப்பசை கொஞ்சங்கூட இல்லாததாகிய வறண்ட, சென்று கடக்க முடியாத, நீண்ட நெறியில்.
துகில் விரித்தன்ன வெயில்: வெள்ளை வெளேரென்று வெண்மையான ஆடையை விரித்தாற்போன்ற வெயில் அடிக்கிறது.
அவிர் உருப்பின் அஞ்சு வரப் பனிக்கும்: வெப்பமோ மிகவும் அதிகமாக இருக்கிறது. கொடிய வெப்பத்தோடு அந்த வெய்யில் காண்பவர் அஞ்சும்படியாக இருக்கும்.
வெஞ்சுரம் இறந்தோர்: அப்படியான கொடுமையான கானகத்தின் கண்ணே சென்ற நம் தலைவர். சுரம் என்றால் காடு. இறந்தோர் என்றால் சென்றவர். ஆக நம் தலைவர் சென்றிருப்பதோ எளிதான வழியல்ல. உன்பொருட்டு அவர் பொருள் தேட அத்துணைக் கடினமான பாதையில் சிறிதும் அஞ்சாமல் சென்றிருக்கிறார்.
தாம் வரத் தெளித்த பருவம் காண் வர இதுவோ என்றிசின்
முன்பொரு பாடலில் தலைவன் குறிப்பாக ஒரு முல்லைச் செடியைக் காட்டி, இம்முல்லையரும்பும்போது நான் வந்துவிடுவேனென்று சொன்னதாகப் படித்தோம். இங்கே தலைவன் தான் வருவதாகக் கார்காலத்தை, மழைக் காலத்தைச் சுட்டிக் காட்டியிருந்தான். இப்பொழுது மழை பெய்திருக்கிறது. மலர்கள் மலர்ந்து கார் காலத்திற்குக் கட்டியங் கூறுகின்றன. அதனால் நீ மிகவும் கவலையுறுகிறாய்.
தலைவியே, அதனால் “நம் தலைவர் வருவதாகச் சொன்ன காலம் இதுதானா என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள்.
தலைவர் வருவதாகச் சொன்ன பருவம் இதுவல்ல. பின் ஏன் மழை பெய்கிறது, மலர்கள் மலர்கின்றன என்றெல்லாம் கேட்கிறாயா?”
“ முதலில் இந்த மேகம் ஒரு தவறு செய்தது. பருவகாலம் இன்னும் வரவில்லையென்பதை மறந்து அறியாமல் அளவுக்கு மீறி கடல் நீரைக் குடித்து விட்டது. நிறையத் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும். அதன் மடி நிறைந்து விட்டது!!”
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை. கமம் என்றால் நிறைந்து விட்ட என்று பொருள். மடி நிறைந்தால் என்ன செய்யும் பாவம்?
பொறுத்தல் செல்லாது: கொஞ்சங்கூடப் பொறுக்க முடியாமல்
இறுத்த வண் பெயல்: அவசரமாகப் பெய்து தள்ளிவிட்டது பெரு மழையாக! அதைப் பார்த்த மலர்ச் செடிகள் என்ன செய்தன? அவற்றிற்காவது இது கார் காலமில்லை. எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிய வேண்டாமோ?
கார் என்று அயர்ந்த உள்ளமொடு: இது மழைப் பருவம் என்று மயங்கிய உள்ளமொடு, கார்காலமென்று நினைத்துக் கொண்டு,
தேர்வு இல பிடவமும், கொன்றையும், கோடலும் – ஆராயதனவாய், “இது ஒரு வேளை காலம் தவறிய மழையோ? அதாவது வம்ப மாரியோ?” என்றெல்லாம் யோசனை செய்யாது புதர்ச் செடிகளும், கொன்றையும், காந்தளும் பூத்தன. முதலில் முல்லைப் புதர் மலர்ந்தது. அதைப் பார்த்து அவசரமாக கொன்றையும், காந்தளும் “ ஓகோ, மழைக்காலம் வந்து விட்டதோ” வென்று மலரவும்,
மடவ ஆதலின் மலர்ந்தன பலவே – அறிவற்றனவாதலின் அப்பக்கத்திலுள்ள மற்ற மலர்களும் மலர்ந்து நின்றன. அவை அஃறிணைப் பொருட்களாகையால் அறியாமையால் மிகுதியாகப் பூத்து விட்டன.
“அவற்றைக் கண்டு நீ கார் காலமென்று மனம் மயங்காதே. இது கார்காலம் போலத் தோன்றினாலும் இது நம் தலைவர் கூறிய பருவமன்று. அவர் சென்ற வழி வெய்யில் மிக்கது என்றாலும், கார்ப் பருவம் வருவதை அவர் அறிவார். இது வம்ப மாரி ( பருவம் தவறிய மழை) காரல்ல. அவர் பொய்யுரைக்க மாட்டார். குறித்த பருவத்தில் வந்துவிடுவார். கவலைப் படாதே.” என்று தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கார்காலம் வந்துவிட்டது. வருவதாகச் சொன்ன தலைவன்தான் இன்னும் வரவில்லை. வேறு வழியொன்றும் தோன்றாமையால் எப்படியாவது தலைவியைச் சமாதானப்படுத்துவதற்காக இப்படி ஒரு கற்பனையான விளக்கத்தைத் தருகிறாள் இத்தோழி!

நீர் அற வறந்த நிரம்பா நீளிடைத்
துகில் விரித்தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தான்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் – மடந்தை! மதி இன்று
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமுங் கொன்றையுங்கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே.
நற்றிணை: 99
பாடியவர்: இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை: பருவங்கண்டாற்றாளாகிய தலைவியைத் தோழி பருவமன்றென்று மறுத்தது.

குறுந்தொகையிலும், இப்படித்தான் ஒரு தோழி இது வம்ப மாரி, பருவம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை, கார் காலமல்ல. கொன்றை மலர் அறியாமையால் பருவம் தவறிப் பூத்து விட்டது என்று தேற்றுகிறாள் !
மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை
கல் பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெறி தரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே ( குறுந்தொகை 66)